இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நிகழ்ந்துவரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் கொடைக்கானலில் உள்ள யூத குடியேற்றங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் – ஹமாஸ் குழுவினர் இடையே போர் தாக்குதல் மோசமாகியுள்ளது. இந்தநிலையில், மத்திய அரசு, இஸ்ரேல் பக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் அரபு நாடுகள் பல பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த யுத்தத்தின் நடுவே இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியர்கள் சிக்கி தவிக்கின்றனர். இஸ்ரேலில் தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பு தொடர்பாக அங்குள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மும்பை தாக்குதலின் போதும் இஸ்ரேலிய யூதர்கள் குறிவைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் யூத குடியேற்றங்கள் உள்ளன. வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் முகாமிடுவதும் கூட்டு பிரார்த்தனை நடத்துவம் வழக்கம். யூதர்களின் மத வழிபாடான சபாத் நிகழ்ச்சி வட்டக்கானல் பகுதியில் நடைபெறுவது வழக்கமாகும். பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெருமளவிலான இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருவது வழக்கம்.
கடந்த ஆண்டு கேரளாவில் ஐஎஸ் ஆதரவாளர்களை என்.ஐ.ஏ.கைது செய்த போது, கொடைக்கானல் யூதர்கள்- இஸ்ரேலியர்களை ஹிட் லிஸ்ட்டில் அவர்கள் வைத்திருந்ததாக எச்சரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போதும் கொடைக்கானல் மலையில் யூதர்களின் குடியிருப்புகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.