தமிழகத்தை பொறுத்தவரை 38 மாவட்டங்களில் 34,792 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகின்றன. ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18,782 ஆகவும், பகுதி நேரக் கடைகள் 9,388 ஆகவும், ஆயிரம் முதல் 1,500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆகவும் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 2.23 கோடி குடும்ப அட்டைகளுக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால், பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 7 கோடி பேர் என்று கூறப்படுகிறது. ரேஷன் கடைகளில் நடுத்தர மற்றும் ஏழை, எளிய குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய வசதிகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும், டிஜிட்டல் முறையில் குடும்ப அட்டைகள், கைரேகை பதிவு உள்ளிட்ட அம்சங்களும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் விழுப்புரத்தில் கூட்டுறவு வங்கி உறுப்பினர்களுக்கு வங்கி கடனுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாட்டில் கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் ரூ.1,254 கோடி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஆவின் உடன் கூட்டுறவுத்துறை இணைந்து ஆவின் பொருட்கள் விற்பனையகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களை விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளோம். இதுதவிர UPI எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு சேவையை தொடங்க உள்ளோம். இவை மே மாதம் 10ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வரப்படும். அதன்பிறகு PhonePe, GPay, Paytm ஆகியவற்றை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் வாடிக்கையாளர்கள் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.