Happy Women’s Day |: எல்லா வருடமும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் உண்மையில் இந்த நாள் எதற்காக அனுசரிக்கப்படுகிறது என்ற காரணம் நம்மில் பலருக்கு தெரியாது. அது என்ன என்பதை இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975-ஆம் ஆண்டில் யுனைடெட் நேஷன்ஸ் மார்ச் 8 ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது. எனினும் இந்த நாள் முதல்முறையாக யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மார்ச் 1911 இல் கொண்டாடப்பட்டது. 1908 ஆம் ஆண்டில் கார்மெண்ட்ஸில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் நியூயார்க் நகர தெருக்களில் நடந்து நல்ல ஊதியம், குறைவான வேலை நேரம் மற்றும் ஓட்டு போடும் உரிமைக்காக போராடினர். இதுவே சர்வதேச மகளிர் தினத்திற்கான ஒரு அடிப்படை யோசனையாக அமைந்தது.
பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் உரிமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அடையாளம் கண்டு சம உரிமைக்கான அவர்களது போராட்டத்தை ஊக்குவிக்க கூடிய ஒரு நாளாக இது அமைகிறது.
சர்வதேச மகளிர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது? பாலின பாகுபாடு சம்பந்தமாக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தை அனைவரது கவனத்திலும் கொண்டு வருவதே இந்நாளின் நோக்கம். ஆண்களுக்கு நிகரான ஊதியம், படிப்பு மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகள் போன்ற பல்வேறு விஷயங்களில் பெண்கள் சந்தித்து வரும் சவால்களையும் வேறுபாடுகளையும் இந்த நாள் பறைசாற்றுகிறது.
அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பெண்களிடையே ஒற்றுமையையும், தோழமையையும் இந்த நாள் ஊக்குவிக்கிறது. பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து, சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை அடையும் பொருட்டு அவர்களது கூட்டு வலிமையை கொண்டாடுவதற்கு அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
2025 மகளிர் தினம் கருப்பொருள்: ஐ.நா அறிவிப்பின்படி 2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின கருப்பொருள் எல்லா பெண்களுக்கும் உரிமைகள், சமுத்துவம், அதிகாரம் அளிப்பதை விரைவில் செயல்படுத்துவதாகும். இந்த சர்வதேச மகளிர் தினம் முதல் உலகெங்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள விஷயங்களை துரிதமாக தகர்த்து எறிவதில் கூட்டு முயற்சி தேவை என்பதை உணர வேண்டும். இருப்பினும் இன்றைய நவீன காலத்தில் கூட பெண்களுக்கான சம உரிமை கிடைத்ததா? என்றால் சந்தேகம் தான், எனவே இன்றைய நாளில் பெண்மையின் மகத்துவத்தை போற்றிட உறுதியேற்போம்.