சங்ககிரி அருகே உணவில் மலம் கலந்து வீட்டை காலி செய்யும்படி துன்புறுத்தி வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சியில் உள்ள பொடாரன்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் தனது விவசாய காடு அருகே நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான தார் சாலையின் ஓரத்தில் சிறிய கொட்டகை அமைத்து அருந்ததியர் பிரிவை சார்ந்த வயதான தம்பதியினரை குடியிருக்க வைத்துள்ளார். இதற்கிடையே, இந்த வயதான தம்பதியினரின் பேத்தி ராதிகா, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் தங்களது வீட்டை காலி செய்து செய்யும்படி ராஜா என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி உணவில் மலம் கலந்து வீசியதாக குறிப்பிட்டுள்ளார்.
புகாரின் பேரில், சங்ககிரி வட்டாட்சியர் அறிவுடை நம்பி, சமூக நல வட்டாட்சியர் லெனின் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிலத்தினை அளவீடு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது புகார் அளித்தவர்கள் எவரும் அங்கு இல்லாததால் அளவீடு செய்யும் பணிகளை முடித்துக் கொண்டு திரும்பினர். இது சம்பந்தமாக எதிர் தரப்பினர் கூறுகையில், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் போடப்பட்ட கொட்டகையில் அருந்ததியினர் வகுப்பைச் சேர்ந்த வயதான தம்பதியினரை குடியிருக்க செய்ததாகவும் தற்போது அவர்களது பேத்தி ராதிகா என்பவர் சிலரின் தூண்டுதலின்பேரில காலி செய்ய மாட்டோம் எனக்கோரி பொய்யான புகார் அளித்து வருவதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.