சென்னை அருகே வீட்டின் உரிமையாளரின் தொல்லையால் 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த திருவேற்காடு, கருமாரியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் தனது 40 வயதான மனைவி உமா, 19 வயதான ஸ்ரீநிதி என்ற மகள் மற்றும் ஒரு மகனுடன் வாழ்ந்து வருகிறார். ஸ்ரீநிதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை இவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவேற்காடு போலீசார், ஸ்ரீநிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஸ்ரீநிதியின் செல்போனை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீநிதியின் தற்கொலைக்கு ஏற்கனவே வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளர்தான் காரணம் என அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த ஸ்ரீநிதியின் பெற்றோர் கூறுகையில், “நாங்கள் ஏற்கனவே திருவேற்காடு, சிவசங்கர் நகர் பகுதியில் வினோத், ரேவதி தம்பதியரின் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தோம். அப்போது குடும்ப பிரச்சனை காரணமாக ரேவதியிடம் இருந்து 2 சவரனை வாங்கி அடகு வைத்துள்ளோம். தற்போது அந்த வீட்டிலிருந்து காலி செய்துவிட்டு வேறு வீட்டிற்கு வாடகைக்கு சென்று விட்டோம்.

இந்த நிலையில் வினோத் அவரது மனைவிடம் இருந்து 7 பவுன் நகை வாங்கி விட்டதாகவும், அதனை திருப்பி தருமாறு கேட்டு வீட்டிற்கு வந்தார். ஆனால், நாங்கள் 2 பவுன் நகையை மட்டுமே வாங்கியதாக தெரிவித்த நிலையில், திருவேற்காடு போலீசில் 7 பவுன் நகையை வாங்கியதாக புகார் அளித்தார். இப்புகாரின்பேரில், திருவேற்காடு போலீசார் எங்கள் அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதனால், ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே, எங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவே, தனது மகள் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினர்.