பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான நடிகை சுஜிதா தனுஷ், சமீபத்தில் தனது கணவருடன் திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் சுஜிதா தனுஷ். கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் முதல் (அக்டோபர் 30) பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக உள்ளது.
இதற்கிடையே, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்த சுஜிதா, இது தொடர்பான வீடியோ பதிவை தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள சுஜிதா, இது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே, தனது திருமண நாளை முன்னிட்டு தனது கணவருக்கான உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு தனுஷ் என்பரை திருமணம் செய்துகொண்ட சுஜிதாவுக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் சின்னத்திரைக்கு வந்த சுஜிதாவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுஜிதா, சீரியல் போலவே பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தனது 13-வது திருமண நாளை கொண்டாடினார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.