மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் மாமன்னன். ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை பார்த்த தனுஷ் வெகுவாக படத்தை பாராட்டிய நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இன்று இயக்குநர் மாரி செல்வராஜையும், உதயநிதியையும் பாராட்டினார். இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மாரி செல்வராஜ், மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய முதல்வருக்கு பெரும் மரியாதை கலந்த நன்றியையும் பிரியத்தையும் சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மக்களின் எதிர்பார்ப்பை இப்படம் நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் மாரி செல்வராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாமன்னன் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தான் எதிர்பார்த்த உணர்வு மக்களிடம் பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.