உலக அளவில் கொடி கட்டி பறக்கும் நிறுவனங்களில் ஒன்று சாம்சங். தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் டிவி, பிரிட்ஜ், ஏசி என வீட்டு உபயோக பொருட்கள் தொடங்கி செல்போன்கள் வரை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் சாம்சங் பிராண்டிற்கு என தனி வாடிக்கையாளர் கூட்டமே உள்ளது. குறிப்பாக செல்போன் விற்பனையில் இந்தியாவில் தனக்கென தனி இடத்தை இந்நிறுவனம் பிடித்துள்ளது. அவ்வபோது லேட்டஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகளையும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், மின்னணு கோப்புகளை (பைல்ஸ்) சேமித்து வைக்கக் கூடிய வகையில் கையடக்க T7 Shield டிஸ்க் ஒன்றை சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவியில் அதிக அளவில் பைல்ஸ்களை சேமித்து வைக்க முடியும் என்றும் சவாலான கால சூழலிலும் பழுது அடையாமல் இருக்கும். இதன் மூலம் உங்கள் முக்கியமான பைல்ஸ்கள் பாதுகாத்து வைக்க முடியும் என்று சாம்சங் விளம்பரப்படுத்தியது. இந்த ஸ்டோரெஜ் கருவியின் படத்தையும் வெளியிட்டு சம்சாங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. நீல நிறத்தில் பார்ப்பதற்கு ரின் சோப் போன்று இந்த கருவி இருந்தது. இந்த பதிவை சாம்சங் நிறுவனம் வெளியிட்ட சிறிது நேரத்திலேயே நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல செம கன்டென்ட் சிக்கியிருக்கிறது என்ற ரீதியில் நெட்டிசன்கள் கமெண்ட் செக்ஷனில் நகைச்சுவை பாணியில் கருத்துக்களை பதிவிட தொடங்கியுள்ளனர்.
சில நெட்டிசன்கள், இது ரின் சோப் விளம்பரம் என்று நினைத்து விட்டேன். பிறகு நன்றாக கவனித்த பிறகுதான் இது சாம்சங் வெளியிட்ட புதிய கருவி என்பது தெரிந்தது என்று பதிவிட்டுள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள் “Detergent SSD” என்ற பெயரையும் சூட்டி விட்டனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், சாம்சங் நிறுவனம் சோப்பு தயாரிப்பிலும் இறங்கிவிட்டதோ..? என்று நான் முதலில் நினைத்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், “இந்த கருவியை நான் வீட்டில் வைத்திருந்தால் எனது அம்மா சோப்பு என நினைத்து தண்ணியில் முக்கிவிட போகிறார்” என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.