கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கூலிப்படையை ஏவி கணவரின் காலை வெட்டி முடமாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பாலை ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இன்ஜினியரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வைஷ்ணவி (24). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். செந்தில்குமார் ஆண்டுக்கு இரு முறை வெளிநாட்டில் இருந்து மதுரைக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 27ஆம் தேதி, மதுரை வந்த செந்தில்குமார், இனிமேல் வெளிநாட்டுக்கு செல்லப் போவதில்லை என்று மனைவியிடம் கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் மகளை பள்ளியில் விட்டு விட்டு டூவீலரில் வீடு திரும்பினார். அப்போது திருப்பாலை பொன்விழா நகர் அருகே டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர், செந்தில்குமாரை வழி மறித்து கீழே தள்ளி பட்டாக்கத்தியால் அவரது இடது காலை குறி வைத்து சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க முயன்றபோது அவரது கையிலும் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்தனர். இதில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொலை முயற்சி நடந்தது தெரியவந்தது. இதற்கிடையே சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என செந்தில்குமார் மனைவி வைஷ்ணவி வலியுறுத்தினார். சந்தேகத்தின் அடிப்படையில் மீண்டும் வைஷ்ணவியிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவருக்கும், அவரது தாய் மாமா மகனான வெங்கடேசுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிந்தது. அவருடனான கள்ளத்தொடர்பை தடையின்றி தொடர கணவரின் காலை வெட்டி முடமாக்கலாம் என வைஷ்ணவி முடிவு செய்துள்ளார். அதன்படி, வெங்கடேஷ் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த சிவகங்கை வாலிபரிடம் பேசியுள்ளார். இதற்கு ரூ.2 லட்சம் என பேசி முடிக்கப்பட்டது. இதற்காக தனது 11 பவுன் நகைகளை ரூ.2.50 லட்சத்திற்கு, சிவகங்கையில் உள்ள அடகு கடையில் வைஷ்ணவி அடகு வைத்துள்ளார்.
இதில் ரூ.2 லட்சத்தை கள்ளக்காதலனிடம் கொடுத்து, கணவரை வெட்ட ஏற்பாடு செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து வைஷ்ணவி மற்றும் வெங்கடேஷை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், கூலிப்படையாக செயல்பட்ட சாந்தகுமாரை தேடி வருகின்றனர். ஏற்கனவே, கடந்த ஜூலை மாதத்தில் செந்தில்குமார் காரில் வந்தபோது, கூலிப்படை மூலம் எரித்துக் கொலை செய்ய முயன்றதும், அதில் அதிர்ஷ்டவசமாக அவர் லேசான காயத்துடன் தப்பியதும் குறிப்பிடத்தக்கது.
போலீஸ் விசாரணையின்போது, செந்தில்குமார், ”என் மனைவி என்னை கொலை செய்ய முயற்சித்திருக்க மாட்டார்” என பலமுறை அழுத்தமாக கூறியுள்ளார். அப்போது, வைஷ்ணவி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை மூலம் கொல்ல முயன்ற தகவல் கொண்ட அவரது செல்போன் உரையாடல் ஆடியோவை போலீசார் அவரிடம் போட்டுக் காட்டினர். அதன்பிறகே, மனைவியே திட்டம் தீட்டி தன்னை கொல்ல முயன்றிருப்பதை தெரிந்து செந்தில்குமார் அதிர்ச்சியடைந்தார்.