சங்குப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் ப்ளூ டீ-யில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் குறித்தும் இதனை தயாரிக்கும் முறை குறித்தும் இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்ளலாம்.
சங்குப்பூ இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை.சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். வாந்தி உண்டாக்கும். பேதியைத் தூண்டும். தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
இத்தனை மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள சங்குப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் ப்ளூ டீ-யிலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இந்த ப்ளூ டீயை எப்படி செய்வது? இதன் பயன்கள் என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். ஆரோக்கியமான ப்ளூ டீ-யை செய்வதற்கு அடுப்பில் ஒரு பாத்திரம் அதில் 2 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைத்து , பின் அதில் 3 அல்லது 4 சங்கு பூக்கள் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்த பின் அடுப்பில் இருந்து இறக்கி ப்ளூ டீ-யை வடிகட்ட வேண்டும். இப்போது இதில் சிறிது தேன் சேர்த்து சுடச்சுட அருந்தினால் சுவையாக இருக்கும்.
இந்த ப்ளூ டீ ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு அபாயத்தை வெகுவாக குறைக்கிறது.ப்ளூ டீயை அருந்துவதால் கண்களின் பார்வை திறன் மேலோங்கும். கண் ஆரோக்கியத்தை சரியாக பராமரிக்க துணை புரிந்து மங்கலான பார்வை மற்றும் ஒளி உணர்திறன் உள்ளிட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இந்த ப்ளூ டீ-யை தினமும் குடிப்பதால் உடம்பில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி தொற்றுகளுக்கு எதிராக போராட வேண்டிய சக்தியை அதிகரிக்க உதவுகிறது.மேலும் கேன்சர் செல்கள் வளர விடாமல் தடுக்க ப்ளூ டீ-யி முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஞாபக சக்தியை அதிகரிக்கவும், இதுதவிர மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் மற்றும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ப்ளூ டீ-யை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் பாதிப்பில் மீண்டு வர துணை புரிகிறது.