ஒருவர் இறந்த பிறகு, அவரது நினைவாக ஒருசில பொருட்களை வைத்துக் கொள்ளும் பழக்கம் பலரிடம் இருக்கும். ஆனால் இறந்தவர்களின் ஒருசில பொருட்களை பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது என்பது வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
அதாவது, பித்ரு பட்ச காலம் என்பது முன்னோர்களை வழிபட ஏற்ற காலமாகும். இந்த காலகட்டத்தில் இறந்த முன்னோர்கள் எமனின் அனுமதி பெற்று பூலோகத்திற்கு வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. மேலும் இக்காலத்தில் இறந்தவர்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம், பிண்டம் போன்றவற்றால் இறந்தவர்கள் முக்தி அடைவதாக நம்பப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள் தொடங்கி, அமாவாசை வரையிலான 14 நாட்கள் பித்ரு பட்ச காலமாகும். இதில் புரட்டாசி அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு பித்ரு பட்சம் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
ஜோதிடத்தின் படி, இறந்த ஒருவரது பொருட்களை பயன்படுத்துவதால், முன்னோர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிவதோடு, பித்ரு தோஷத்தை அனுபவிக்கக்கூடும். இப்போது இறந்தவர்களின் எந்த பொருட்களையெல்லம் பயன்படுத்தக்கூடாது என்பதைக் காண்போம்.
இறந்தவர்களின் ஆடைகளை அந்த வீட்டில் உள்ளோர் பயன்படுத்தவோ அல்லது அணியவோ கூடாது. அப்படி பயன்படுத்தினால், அதன் விளைவாக பித்ரு தோஷத்திற்கு ஆளாக நேரிடும். வேண்டுமானால், அவர்களின் ஆடைகளை தானமாக மற்றவர்களுக்கு வழங்கலாம். இம்மாதிரியான செயல் இறந்தவர்களின் ஆன்மாவிற்கு சாந்தி அளிக்கும்.
இறந்த முன்னோர்களின் நகைகள் பயன்படுத்துவது நல்லதல்ல. அப்படி பயன்படுத்தினால், அது பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேண்டுமானால், அந்த நகைகளை அப்படியே பயன்படுத்தாமல், அவற்றைப் பயன்படுத்தி புதிய நகைகளை தயாரித்து பயன்படுத்தலாம்.
சிலர் இறந்த தங்கள் முன்னோர்களின் கடிகாரத்தை சேகரித்து பத்திரமாக வைத்துக் கொள்வார்கள். ஆனால் அப்படி இறந்தவர்களின் கடிகாரத்தை பயன்படுத்துவது ஜோதிடத்தின் படி மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. ஒருவேளை அப்படி பயன்படுத்தினால், அதன் விளைவாக பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். வேண்டுமானால், அதற்கு பதிலாக, அந்த கடிகாரத்தை தானமாகவோ அல்லது மண்ணில் புதைக்கவோ செய்யலாம்.