சென்னையில் மழை வெள்ளத்ததால் பாதிக்கப்பட்டு இதுவரை நிவாரணத்தொகை கிடைக்காதவர்களுக்கு விரைவில் ரூ.6,000 கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”சென்னையில் உள்ள விளையாட்டு மைதானங்களில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மாற்றப்பட உள்ளது. இதற்காக விளையாட்டு மைதானங்களை எஸ்.டி.எ.டி. என்ற மாநில அரசின் அமைப்பிடம் ஒப்படைத்துள்ளோம். தற்போது சென்னை மாநகராட்சியில் 863 பூங்காக்கள் உள்ளது. மேலும், 250 சிறுவர்கள் விளையாட்டு மைதானங்கள், 238 பல வகையான வசதிகள் கொண்ட விளையாட்டு மைதானங்கள் இருக்கிறது. இவற்றில் ஒரு சில மைதானங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளது. அத்தகைய இடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்போம்.
வெள்ளநிவாரண தொகையை பொறுத்தவரை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறையுடன் மாநகராட்சி உறுதுணையாக இருந்துள்ளது. சென்னை மாநகராட்சிசார்பில் மழை நிவாரண தொகைக்காக விடுபட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துள்ளோம். இந்த பட்டியலை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் பெற்றபின் விரைவில் விடுபட்ட அனைவருக்கும் நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.