மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டோருக்கான சிறப்பு முகாம்கள் இன்று (ஆகஸ்ட் 18) முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற 1.5 கோடிக்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை நடக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து முகாம் நாட்களிலும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெற உள்ளது. ஏற்கனவே நடந்த இடங்களில் தான் இந்த முகாமும் நடைபெறும். இதுகுறித்த விவரங்கள் ரேஷன் கடைகளிலும் தகவல் பலகையாக வைக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பப் பதிவின்போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்க வருவாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எந்த சான்றுகளையும் தேவையில்லை. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 044-25619208 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.