சொத்து வரி தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சலுகை ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து அரையாண்டுக்கு சுமார் ரூ.850 கோடி வீதம், ஆண்டுக்கு ரூ.1,700 கோடி வசூலிக்கப்பட்டு வருகிறது. சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும். அதேபோல, சொத்துவரி மற்றும் தொழில்வரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்படுகிறது.
அரையாண்டு துவங்கும் முதல் 30 நாட்களில், சொத்துவரி செலுத்துவோருக்கு, வரியில் 5 சதவீதம், அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தியவர்களுக்கு 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. பிறகு செலுத்தப்படும் சொத்துவரிக்கு 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்படும். கடந்த 2023-24 நிதியாண்டில் மாநகராட்சியில் இலக்கை தாண்டி ரூ.1,800 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வசூலிக்கும் பணிகளை, தேர்தல் பணிகளுக்கு நடுவே மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 1 முதல் 20ஆம் தேதி வரை ரூ.190 கோடி வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் வரியை செலுத்தி 5 சதவீத தள்ளுபடியையும் பெற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, சென்னையில் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் சொத்துவரி நிலுவை இல்லாத சொத்து உரிமையாளர்களாக இருக்கின்றனர். எனவே, பொதுமக்கள் 5% தள்ளுபடியை பெற 30ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்துமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More : வரி செலுத்துபவரா நீங்கள்..? இதற்கெல்லாம் இனி வரியே தேவையில்லை..!! செம குட் நியூஸ்..!!