அமெரிக்காவில் வெளியான எப்ஸ்டீன் லிஸ்ட் அந்த நாட்டையே உலுக்கியுள்ளது. சினிமா நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்கள் இந்த லிஸ்டில் சிக்கியுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அது என்ன எப்ஸ்டீன் லிஸ்ட் என்று நினைக்கிறீர்களா..? சரி, அது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீன் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிஸ்னஸ் மேன். விர்ஜின் தீவில் இவர் சில நிதி நிர்வாகம் தொடர்பான நிறுவனங்களை நடத்தி வந்தார். இவர், அந்நாட்டு நீதிமன்றத்தால் பாலியல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர். எப்ஸ்டீன், விர்ஜின் தீவில் தனக்கு என்று தனியாக ஒரு தீவு வாங்கி, அங்கு பெரிய மாளிகை கட்டி அதில் பல பெண்கள் மற்றும் குழந்தைகளை பலாத்காரம் செய்துள்ளார். அதேபோல் பல பிரபலங்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்களை இங்கே அழைத்து வந்து அவர்களுக்கு சேவைகளை வழங்கியிருக்கிறார்.
இதற்காக அவர் ஒரு “கல்ட்” குழுவை உருவாக்கியதோடு, கிளப் போல இதை நடத்தி அடிக்கடி அங்கே பிரபலங்களை வரவழைத்து சிறுமிகளை சித்திரவதை செய்துள்ளார். இதை பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளார். இந்நிலையில்தான் 2005ஆம் ஆண்டில், புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள போலீசார், எப்ஸ்டீனை கைது செய்தனர். தனது 14 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெற்றோர் அளித்த புகாரை அடுத்து போலீசார் விசாரிக்க தொடங்கினர். எப்ஸ்டீன் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் 14 வயதுக்குட்பட்ட 36 சிறுமிகளை ஃபெடரல் அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்தனர்.
இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணையின் போது எப்ஸ்டீன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், 2008இல் புளோரிடா மாநில நீதிமன்றத்தால் இவர் குற்றவாளி என்றும் அறிவிக்கப்பட்டார். ஆனால், இந்த வழக்கில் இரண்டு குற்றங்களுக்காக மட்டுமே அவர் தண்டிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 13 மாதங்கள் காவலில் இருந்தார். அதன்பின் விடுதலையும் ஆனார். இதனைத் தொடர்ந்து புளோரிடா மற்றும் நியூயார்க்கில் சிறார்களை வன்கொடுமை செய்ததற்காக எப்ஸ்டீன் மீண்டும் ஜூலை 6, 2019 அன்று கைது செய்யப்பட்டார். அவர் ஆகஸ்ட் 10, 2019 அன்று அவரது சிறை அறையிலேயே மர்மமாக இறந்தார்.
அவரது மரணத்திற்கு காரணம் தூக்குப்போட்டு தற்கொலை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், எப்ஸ்டீனின் வழக்கறிஞர்கள் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மரணத்திற்கான உண்மையான காரணம் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இவரிடம் இருந்த “கஸ்டமர்கள்” லிஸ்ட்தான் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதன் 2-வது லிஸ்ட் தற்போது நியூயார்க் கோர்ட்டில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வெளியான இந்த லிஸ்ட் அந்த நாட்டையே உலுக்கி உள்ளது.
அதில், அமெரிக்க முன்னாள் அதிபர்கள் டொனால்ட் டிரம்ப், பில் கிளிண்டன், அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணி ஹிலாரி கிளிண்டன், பிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், ஹாலிவுட் நட்சத்திரம் லியோனார்டோ டிகாப்ரியோ, மைக்கேல் ஜாக்சன், நடிகர் புரூஸ் வில்லிஸ், நடிகை கேமரூன் டயஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையே, எதிர்காலத்தில் பிளாக்மெயில் செய்ய வேண்டும் போன்ற குற்ற நோக்கங்களுக்காக இந்த பிரபலங்கள் மேற்கொள்ளும் பாலியல் செயல்பாடுகளை பதிவு செய்ய எப்ஸ்டீன் தனது தீவு முழுக்க பல இடங்களில் மறைக்கப்பட்ட கேமராக்களை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த வீடியோ ரெக்கார்டர்களும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.