கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு இ-சிகரெட் தடை சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி இ-சிகரெட் எனப்படும் மின்னணு சிகரெட்டுகளை ஏற்றுமதி, இறக்குமதி உற்பத்தி செய்தல், விளம்பரம் மற்றும் விற்பனை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தனிநபர் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்படவில்லை. ஆகையால் பலர் ஆன்லைன் மூலம் இ-சிகரெட்டை பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
இ-சிகரெட் தடை சட்டத்தில் அபராதம் சிறைத்தண்டனை போன்ற கடுமையான விதிமுறைகள் இருந்தும், இது மக்களிடம் எளிமையாக கிடைப்பதாக மத்திய அரசுக்கு புகார் வந்தது. இந்நிலையில் இ-சிகரெட்டை எந்த வடிவத்தில் வைத்திருந்தாலும் அது தடை சட்டத்தை மீறும் செயலாகும் என்று ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றம் என்றும், இந்த தடையை மீறுவோர் குறித்து புகார் தெரிவிக்க ஒரு இணையதளத்தையும் சுகாதார அமைச்சகம் தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இ-சிகரெட்டை ஆன்லைனில் விற்பனை செய்த 15 இணையதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து சுகாதார துறை அமைச்சகம் கூறுகையில்,‘‘இ சிகரெட் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம் ஆகியவற்றை தடை செய்வதற்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே இ-சிகரெட் 2019 சட்ட விதிகளை மீறாமல் நாட்டிற்குள் இ-சிகரெட் வைத்திருப்பது சாத்தியமில்லை. தனிநபர் இ சிகரெட் வைத்திருந்தால் சட்ட விதிகளை மீறுவதாக கருதப்படும். இது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கும் விளக்கம் அனுப்பப்பட்டுள்ளது. இது தடையை அமல்படுத்துவதை மேலும் வலுப்படுத்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.