கோவையில் இருந்து திருச்சி நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றபோது சவுக்கு சங்கர் திருமணமாகாத பெண் காவலரிடம் அவரது பெயர் மற்றும் செல்போன் எண்ணை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெண் காவலர், திருச்சி நீதிபதி முன்பு பரபரப்பான புகாரை முன்வைத்துள்ளார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தான் அளித்த பேட்டியில் பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்தார். இதுதொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு தொடர்பாக கடந்த 4ம் தேதி கோவை போலீசார் தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்தனர். அதன்பிறகு அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பான புகாரில் சேலம், சென்னை, திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இதுதவிர கிளாம்பாக்கம் பஸ் நிலையம், பெண் பத்திரிகையாளர் பற்றி அவதூறு உள்ளிட்ட புகார்களிலும் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சவுக்கு சங்கர் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அவருக்கு ஓராண்டு வரை ஜாமீன் கிடைக்காது. இத்தகைய சூழலில் தான் திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் புகாரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் சவுக்கு சங்கர் இன்று திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் போலீஸ் வாகனத்தில் திருச்சி நீதிமன்றம் அழைத்து வந்து திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர்ப்படுத்தினர். இந்த வேளையில் இதனிடையே பெண் காவலர் ஒருவர் சவுக்கு சங்கர் மீது பரபரப்பான புகாரை முன்வைத்தார். அதாவது ‛‛தனக்கு திருமணம் ஆகாத நிலையில் வேனில் வரும்போது எனது பெயரையும், செல்போன் எண்ணையும் சவுக்கு சங்கர் கேட்டார். என் பெயரை கூறியிருந்தால் அவர் அவப்பெயரை ஏற்படுத்த கூட வாய்ப்புள்ளது” என கூறினார். இது நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக சவுக்கு சங்கரும், பெண் காவலர்கள் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது கோவையில் இருந்து போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட போது பெண் காவலர்கள் தன்னை தாக்கி அதனை வீடியோவாக எடுத்து கொண்டனர். அந்த வீடியோவை வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
ஆனால் காவலர்கள் தரப்பில் அந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி ஜெயப்பிரதா, சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அந்த அறிக்கை நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. அதன்மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே தான் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருச்சி போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீது இன்று மதியம் 1 மணிக்கு நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவு பிறப்பிக்க உள்ளார். அதுவரை நீதிமன்ற காவலில் கோவைக்கு பதில் திருச்சி மத்திய சிறையில் சவுக்கு சங்கரை அடைக்க நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார்.
Read More: ’25 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த SBI நிறுவனம்!’ என்ன காரணம் தெரியுமா?