தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், எம்எல்ஏக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், அமலாக்கத்துறை அறிக்கையில் சொன்ன ரூ.1,000 டாஸ்மாக் ஊழல் பின்னணியில் உள்ள அந்த தியாகி யார்..? என்ற கேள்வியை பேட்ஜாக அணிந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் அதிமுக உறுப்பினர்கள் இன்று கலந்து கொண்டனர்.
மேலும், சட்டப்பேரவைக்குள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பதாகைகளை காட்டிய 7 அதிமுக உறுப்பினர்கள் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மற்றவர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும், இனி எந்த உறுப்பினரும் பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சபாநாயகரின் உத்தரவை அடுத்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், செங்கோட்டையனும் வெளியேறினார். ஆனால், சற்று நேரத்திலேயே மீண்டும் அவைக்குள் வந்தார். பின்னர், அந்த தியாகி யார்..? என்ற பேட்ஜை அகற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டதால், பேட்ஜை கழற்றி வைத்துவிட்டு செங்கோட்டையன் பேசினார். தனது தொகுதி சார்ந்த கவன ஈர்ப்பு குறித்து பேச வேண்டும் என்பதற்காக, செங்கோட்டையன் மட்டும் உரையாற்றியதாக கூறப்படுகிறது. முன்னதாக அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் பதாகையை ஏந்திய போது, செங்கோட்டையன் தன்னிடம் கொடுக்கப்பட்ட பதாகையை வாங்க மறுத்திருந்தார்.