திமுகவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் போஸ் வெங்கட், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலின் கடின உழைப்பாளி. 14 வயதில் இருந்தே உழைத்து வருகிறார். அவரை பார்த்து தற்போது நான் உனக்கு போட்டி என்கிறாரே அவர் யார்..? 14 வயதில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்..? அந்த வயதில் உங்கள் தந்தையின் படத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்திருப்பீர்கள். எப்படி கதாநாயனாகலாம் என யோசித்திருப்பீர்கள்.
அதேபோல், 20 வயதில் நீங்கள் என்ன நினைத்திருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். ஏனென்றால், நானும் சினிமா துறையில் இருந்து தான் வந்திருக்கிறேன். தற்போது 50 வயதில் வந்து திமுகதான் எனக்கு போட்டி என்று சொல்கிறீர்கள். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று சொன்னபோது ஒட்டுமொத்த தமிழ்நாடே நெகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தது. காரணம் ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டுமென மக்கள் விரும்பினார்கள்.
திரு.ஜோசப் விஜய் அவர்களே இது தவறு. வாரிசு அரசியல் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் யாருடைய வாரிசு..? உங்கள் தாத்தா சினிமா காரர், அப்பா சினிமாகாரர், அம்மா சினிமாகாரர், மாமா சினிமாகாரர் அப்போது நீங்கள் சினிமா வாரிசு. உங்களுக்கு 14 வயது இருக்கும்போது உங்கள் அப்பா திரைக்கதை, வசனம் எழுதி பார்த்திருப்பீர்கள். ஆனால், உதயநிதி ஸ்டாலின் அந்த வயதில், இந்திரா காந்தியுடன் தாத்தா பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தவர்” என்று பேசியுள்ளார்.