பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான இயக்கத்தில் கையெழுத்து போட்ட முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு பல அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமீபத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ஆனால், பாஜக சார்பில் இதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்தியதாக பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான இயக்கத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கையெழுத்திட்டதாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயரை உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாலும், முன்னாள் எம்எல்ஏ K.S.விஜயகுமாரை இன்று முதல் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். எனவே, அவருடன் அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது” என தெரிவித்துள்ளார்.