எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து மரணம் குறித்து இயக்குநர் திருச்செல்வம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து (56) எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்றவராக மாறினார். இவரின் நடிக்கும் விதம், உடல் மொழி, முக பாவனை உள்ளிட்டவைகளால் ரசிகர்கள் வட்டத்தை சேர்த்து வைத்திருந்தார். இவரது நடிப்பு எதிர்நீச்சல் சீரியலை பெரும் உச்சத்துக்கே கொண்டு சென்றது.
இவர் தேனி மாவட்டம் பசுமலை பகுதியைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் வைரமுத்துவின் உதவியாளராக சேர்ந்தார். இயக்குநர்கள் வசந்த், ராஜ்கிரண், சீமான், மணிரத்தினம், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயத்குநராக பணியாற்றியுள்ளார். இவர் அரண்மனை கிளி, என் ராசாவின் மனசிலே படத்தில் உதவி இயக்குநராக இருந்தார். ஆசை உள்ளிட்ட படங்களிலும் இயக்குநர் வசந்திற்கு உதவி இயக்குநராக இருந்தார். இந்நிலையில், இவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதுகுறித்து இயக்குநர் திருச்செல்வம் கூறுகையில், நடிகர் மாரிமுத்து இறந்தது எல்லாருக்கும் மிகப் பெரிய இழப்பு. நாங்கள் இன்று ஷூட்டிங்கிற்கு தயாராகி கொண்டிருந்தோம். அவருக்கு இன்று சூட்டிங் இல்லை என்பதால் டப்பிங் பேசிவிட்டு வருவதாக சொன்னார். ஆனால், அதற்குள் அவருக்கு இப்படி ஆகிவிட்டது. இது எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகிற்கே பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில்தான் இருக்கிறார்கள்” என்று திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.