தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவை கிணத்துக்கடவு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்துள்ளது.. இந்த விவகாரத்தில் பாஜக தொடர் போராட்டங்களைக் கையில் எடுக்கும். அமுல் நிறுவனத்தில் வரும் லாபத்தில் 82 சதவிகிதம் விவசாயிகளுக்குச் செல்கிறது. ஆவின் நிறுவனம் அப்படி நடந்துகொள்ளவில்லை, ஆவின் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. திமுக அமைச்சர் ஒருவருக்குச் சாதமாக இருக்கவே இப்படிச் செய்கிறார்கள். கோவை கார் வெடிவிபத்தில் இப்போது வரை என்ஐஏ விசாரணை திருப்திகரமாக உள்ளது
ரபேல் விமானத்தின் பாகங்களில் இருந்து 500 கைக்கடிகாரங்கள் செய்யப்பட்டது, நான் தேசியவாதி என்பதால் அதில் ஒன்றை நான் வாங்கியுள்ளேன், என் உயிர் உள்ளவரை இந்த கடிகாரம் என் கையில் இருக்கும். மேலும் அதிமுக உட்கட்சி பிரச்சனையில் பாஜக எப்போதும் தலையிடாது. இப்போதெல்லாம் பாஜகவைப் பற்றி பேசிதான் திமுக வண்டி ஓடுகிறது. ஆரிய – திராவிடம் என்கிற பிரிவினையை ஏற்காதவன் நான். இன்னுமே 2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்தான் ஆ.ராசா. தமிழ்நாட்டின் நம்பர் ஒன் நடிகர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தான். திமுக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஒவ்வொரு நாளும் விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.