மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த ‘எதிர்நீச்சல்’ குழுவினர் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களைக் கலங்கடிக்கச் செய்துள்ளது.
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை டப்பிங் பணியின் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு முன்பு பல திரைப்படங்களில் பணியாற்றியிருந்தாலும், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
இந்நிலையில், நடிகர் மாரிமுத்துவுக்கு ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடித்து வரும் ஹரிபிரியா, பிரியதர்ஷினி, கமலேஷ், இயக்குநர் திருச்செல்வம் உள்ளிட்டப் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். எதிர்நீச்சலில் மாரிமுத்துவின் தம்பியாக நடிக்கும் கமலேஷ் பேசுகையில், ”டப்பிங்கின் போது நான் தான் அவருடன் இருந்தேன். வியர்க்கிறது என்று வெளியே சென்றார். சரி… காற்று வாங்கி விட்டு திரும்பி வந்து விடுவார் என எதிர்பார்த்தேன். ஆனால், அவரே காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரது மகள் தான் எங்களுக்குத் தகவல் சொன்னார். கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து விட்டது. யாராலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு அவருடையது” என்றார்.
இந்தத் தொடரின் இயக்குநர் திருச்செல்வம், “நாங்கள் ஷூட்டிங்கிற்கு தயார் செய்து கொண்டு இருந்தோம். இன்று அவருக்கு ஷூட் இல்லாததால் அவர் டப்பிங் பேசிவிட்டு ஷூட்டிங் வந்து விடுதாக சொன்னார். ஆனால், இப்படி நடந்து விட்டது. யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் இது. வேறு யாரை விடவும் அவருடைய குடும்பத்திற்கு பெரிய இழப்பு இது. நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம்” என்றார்.