வெள்ளியங்கிரி மலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது குறித்து வனத்துறை, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர் வனப்பகுதியில் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி மலை கோவில். 7 மலைகளை கடந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் வரை இந்த மலைக்கு நடந்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பொதுமக்கள் இந்த கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, தற்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி வருகின்றனர்.
மகா சிவாராத்திரியை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வெள்ளியங்கிரி ஆண்டவரை காண பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான், தவெக கட்சி தொண்டர்களும் வெள்ளியங்கிரி மலையேறியுள்ளனர். அதில் ஒருவர் 7-வது மலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றிவிட்டு வந்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இச்சம்பவம் குறித்து வனத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கோவை வனக்கோட்ட அலுவலர் ஜெயராஜ் உத்தரவை அடுத்து தவெகவின் கட்சிக் கொடி அகற்றப்பட்டது. மேலும், வனப்பகுதியில் அத்துமீறி கட்சிக் கொடியை பறக்க விட்டது யார் என கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More : அதிக இணைய முடக்கங்களை எதிர்கொண்ட ஜனநாயக நாடுகளில் இந்தியா முதலிடம்!. வெளியான தகவல்!