தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் தூய சவேரியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, அவர், போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாலை ஷிப்டில் படிக்கும் நெல்லையை சேர்ந்த மாணவிக்கு தற்காலிக பேராசிரியராக பணிபுரிந்து வந்த மருதகுளம் பகுதியைச் சேர்ந்த பிரைட் ஜோவட்ஸ் (34) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. செல்போன் மூலம் அடிக்கடி பேசுவது, இரவில் ஆபாச மெசேஜ் அனுப்புவது போன்ற நடவடிக்கையில் அந்த பேராசிரியர் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோருடன் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குற்றம் உறுதியானதை அடுஹ்ட்து, பேராசிரியர் பிரைட் ஜோவட்ஸை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் மாணவ – மாணவிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.