ராஜஸ்தானில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒருவரை கொடூரமாக தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிரோஷி மாவட்டத்தை சேர்ந்தவர் 38 வயதான பாரத் குமார். இவர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர், அப்பகுதி முழுவதும் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாரத் குமார் வேலை பார்த்தபோது, அவரது வேலைக்கு ஊதியமாக ரூ. 21 ஆயிரம் கேட்டுள்ளார். ஆனால், அந்த நபர்கள் வெறும் ரூ.5 ஆயிரம் மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாரத் குமார் மீதம் உள்ள தொகையை கேட்டபோது, தருகிறேன் என்று சொல்லி அந்த நபர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்துள்ளனர். ஒரு கட்டம்வரை பொறுமையாக இருந்த பாரத் குமார், நீங்கள் பணத்தை தராவிட்டால் காவல்நிலையத்தில் புகார் அளிப்பதாக எச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் ஒன்று சேர்ந்து பாரத் குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவருக்கு செருப்பு மாலை போட்டு சிறுநீர் குடிக்க வைத்து, அதை வீடியோவாகவும் பதிவிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து டிஎஸ்பி தினேஷ் குமார் கூறுகையில், ”குமார் சில மின்சார வேலைகளைச் செய்து 21,100 ரூபாய் தனது சம்பளமாக கேட்டுள்ளார். அப்போது அவர்களிடம் இருந்து முன்பணம் போல் ரூ. 5,000 பெற்றுள்ளார். கடந்த நவம்பர் 19ஆம் தேதி பாரத் குமார் மீதமுள்ள தொகையைக் கேட்பதற்காக மதியம் ஒரு தாபாவுக்குச் சென்றார். ஆனால், இரவு 9 மணிக்கு வரச் சொன்னார்கள். இரவு 9.10 மணியளவில் அவர் திரும்பிச் சென்றபோது, பணம் கொடுக்காமல் காத்திருக்க வைத்துள்ளனர். பின்னர் அவர் போலீசில் புகார் செய்வதாக பாரத் குமார் மிரட்டியுள்ளார்.
அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரை மற்றவர்களுடன் சேர்ந்து பிடித்து சரமாரியாக தாக்கினர். குமாரை தாக்கும் போது, அவர்கள் கழுத்தில் செருப்பு மாலையை அணிவித்தனர். அவர்களில் ஒருவர் வீடியோவை எடுத்து சமூக ஊடக தளங்களில் பதிவேற்றினார். கிட்டத்தட்ட 5 மணி நேரம் அவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.