சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதியை அமைச்சராக்க கவர்னர்க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை அடுத்து டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி. நாளை காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தலைமைச்செயலகத்தில் உதயநிதி ஸ்டாலினுக்காக தயாராகி வருகிறது தனி அறை, நாளை இரவுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உதயநிதி ஸ்டாலினுக்கு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கவனித்துவரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும், மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வசம் உள்ள சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையும் அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வசம் உள்ள சிறப்புத் திட்ட செயலாக்கம் என்பது பல்வேறு அமைச்சகங்களில் உள்ள சிறப்புத் திட்டங்களை கண்காணிக்கும் துறை என்பதால், இந்தத் துறையின் அமைச்சர் எல்லா அமைச்சகங்கள் அமல்படுத்தும் சிறப்புத் திட்டங்கள் குறித்த தகவல்களை கேட்டுப் பெற முடியும்.
மேலும் தமிழக அரசு 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்களை அமைக்குமென ஏற்கனவே அறிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டு துறை அமைச்சர் ஆன பிறகு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் மாநிலம் தழுவிய அளவில் அவருக்கு செல்வாக்கை ஏற்படுத்தலாம் என தகவல் தெறிவிக்கப்ட்டுள்ளது.