தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் ஒரு வாரத்தில் 174 பேர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலக அளவில் இதய நோய் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளம் வயதினருக்கும் இதய நோய் பாதிப்பு அதிகரித்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. மாரடைப்பு ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் சிகிச்சை பெறுவது உயிரிழப்பை தடுக்கும். எனவேதான், தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதயம் காப்போம் திட்டத்தை 2023ஆம் ஆண்டு முதல் அரசு செயல்படுத்தி வருகிறது
மாரடைப்புடன் வருபவருக்கு அதை தடுக்கும் வகையில், ஆஸ்பிரின் 150mg உள்ளிட்ட 25 மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் கிராமப்புறங்களில் மட்டும் 174 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். உணவு முறை போன்ற காரணங்களால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்காக தமிழ்நாட்டில் பிரத்யேகமாக தொடங்கப்பட்ட இதயம் காப்போம் திட்டத்தில் இதுவரை 15,019 பேர் பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களில் 90% பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.