தாயின் கருவறையில் இருக்கும் சிசுவிற்கு இதய அறுவை சிகிச்சை செய்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.
28 வயது பெண் மகப்பேறு சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே 3 முறை கர்ப்பமடைந்த நிலையில், வயிற்றுக்குள்ளேயே சிசு இறந்து பிறந்துள்ளது. இந்நிலையில், கருப்பையில் குழந்தையின் செயல் குறித்து மருத்துவர்கள் பரிசோதித்த போது, இந்த முறையும் குழந்தைக்கு இதயத்தில் கோளாறு இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது குழந்தையின் இதய வால்வு ஒன்று சுருங்கி அதனால் இதயத்திற்குள் ரத்தம் சீராக செல்ல முடியாமல் இருந்துள்ளது கண்டறியப்பட்டது. இதனை சரிசெய்ய இதய நோய் நிபுணர்கள், இதய மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் ஆபத்தான கர்ப்ப காலத்தை கையாளும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது. அவர்கள் முழுமையாக பரிசோதனை செய்து குழந்தைக்கு வயிற்றுக்குள்ளேயே அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதையடுத்து, அல்ட்ரா சவுண்ட் வழிகாட்டுதல் உதவியுடன், தாயின் வயிறு வழியாக நுண்ணிய குழாயை செலுத்தி சிசுவின் இதயத்திற்குள் ஒரு சிறிய ஊசியை பொருத்தி இதய வால்வை விரிவடையச் செய்து ரத்த ஓட்டத்தை சீராக்கியிருக்கிறார்கள். இதனை 90 நிமிடங்களுக்குள் செய்து முடித்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதையடுத்து தாயும் வயிற்றுக்குள் இருக்கும் சிசுவும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.