தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டின் சில இடங்களில் 21ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும், ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.