கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடும் வெயில் காரணமாக பல்வேறு உடல் நல பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. அதில் ஒன்று தான் ஹீட் ஸ்ட்ரோக். மிக அதிகமான வெப்பத்தை உடலால் தாங்க முடியாமல் போகும் பட்சத்தில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.
பொதுவாக மனிதர்களின் உடல்நிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட், 37 டிகிரி செல்சியஸாக இருக்கும். வெயில் காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று அதிக நேரம் வெயிலில் இருப்பதால், உடலின் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து 104 ஃபாரன்ஹீட்டுக்கு மேல் செல்லும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. கடுமையான வெயில் காலத்தில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக சில நேரங்களில் வியர்வை வராது.
உடலில் இருந்து வியர்வையை வெளியேற்றும் அமைப்பு செயல்படாமல் போனால் உடல் வெப்பம் அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும். இதனால் சிலர் மயக்கம் போட்டு கீழே விழுவார்கள். சில நேரம் ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழப்பு கூட ஏற்படலாம். சரி, ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் உடனடியாக என்ன முதலுதவி செய்ய வேண்டும்.
இது பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், குழந்தைகள், இதய செயலிழப்பு நோயாளிகள், கல்லீரல் செயலிழப்பு நோயாளிகள், உடல் எடை அதிகம் உடையவர்கள், வெயிலில் அதிக நேரம் கட்டாயம் உழைக்க வேண்டியவர்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அறிகுறிகள்: இதன் முக்கியமான அறிகுறி உடல் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கு மேல் இருத்தல். மேலும் தலைவலி, குமட்டல், வாந்தி, தசை பிடிப்பு, இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல், சிறுநீரக செயலிழப்பு, வலிப்பு, கோமா(ஆழ் மயக்கம்) போன்ற அறிகுறிகளை இது ஏற்படுத்தலாம்.
சர்க்கரை நோயாளிகள் இதை தடுப்பதற்கு கீழ்க்கண்ட ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.
1. வெப்பம் சுட்டெரிக்கும் போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி கட்டாயம் செல்ல வேண்டிய சூழ்நிலையில் குடை எடுத்து செல்வது நல்லது.
2. மது அருந்துவதை தவிர்த்தல்.
3. ஏசி அறையில் தங்குதல், மின்விசிறி கீழே இருத்தல் அல்லது நிழலில் ஓய்வெடுத்தல்.
4. போதுமான அளவு தண்ணீர் குடித்தல்.
5. உலர்ந்த பருத்தி ஆடைகளை அணிதல்
6. இறுக்கமான அல்லது ஜீன்ஸ் போன்ற தடிமனான ஆடைகள் அணிவதை தவிர்த்தல்
7. டீ, காபி போன்றவற்றுக்கு மாற்றாக நீராகாரம், மோர் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுதல்.