Nepal Flood: நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தின் சில பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெயது வருகிறது. இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் அதிகாரிகள் எச்சரித்தளனர். இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், 69 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 226 வீடுகள் இடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள காவல்துறை துணை செய்தித் தொடர்பாளர் பிஷ்வோ அதிகாரி கூறுகையில், தொடர் மழை காரணமாக நேபாளத்தில் 59 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் 34 பேர் காத்மாண்டு பள்ளத்தாக்கில் உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி 36 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். நாடு முழுவதும் மொத்தம் 44 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் 16 பேர் காத்மாண்டு பள்ளத்தாக்கில் காணவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
நேபாளத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 44 இடங்களில் முக்கிய நெடுஞ்சாலைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதற்கிடையில், தற்காலிக பிரதமரும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சருமான பிரகாஷ் மான் சிங், உள்துறை அமைச்சர், உள்துறை செயலாளர் மற்றும் பாதுகாப்பு முகமைகளின் தலைவர்கள் உட்பட பல்வேறு அமைச்சர்களின் அவசரக் கூட்டத்தை கூட்டி, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
காத்மாண்டுவில் 226 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதால், சுமார் 3000 பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. அதேநேரம், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.