தெற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி அதிகாலையில் வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை கடந்து நெல்லூர் – புதுச்சேரி இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடக்கும் சமயத்தில் தரை காற்றின் வேகம் மணிக்கு சுமார் 35கிமீ முதல் 55கிமீ வரை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையில் இருந்து 440 கிமீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 460 கிமீ. கிழக்கு தென் கிழக்கில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு சுமார் 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. கடந்த 6மணி நேரத்தில் மணிக்கு சுமார் 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று மற்றும் இன்றைக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எவை இயங்காது: கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ராணிப்பேட்டை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்கள் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்களில் இன்று முன்பதிவு செய்தவர்கள் வேறு நாட்களை தேர்வு செய்ய அறிவுறுத்தல்.
தொடர் மழை காரணமாக வண்டலூர் உயிரியியல் பூங்காவிற்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரியியல் பூங்காவில் உள்ள பறவைகள் மற்றும் விலங்குகள் மழையில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளையும் பூங்கா ஊழியர்கள் செய்துள்ளனர்.
கனமழை காரணமாக பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று 7 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவை, சென்னை சென்ட்ரல் போடி விரைவு ரயில், ஜோலார்பேட்டை சென்னை சென்ட்ரல் ஏலகிரி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு ரயில், திருப்பதி சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் திருப்பதி விரைவு ரயில், திருப்பதி சென்னை சென்ட்ரல் சப்தகிரி விரைவு ரயில், ஈரோடு சென்னை சென்ட்ரல் ஏற்காடு விரைவு ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எவை இயங்கும்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டாலும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருந்துகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் ஆகியவை செயல்படும்.
மேலும் இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரெயில், எம்.ஆர்.டி.எஸ், ரெயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும். பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.