சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும். பிறகு, மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பிப்ரவரி 1ஆம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையும். இதன் காரணமாக, இன்று மற்றும் வருகின்ற 29, 30 ஆகிய தேதிகளிலும் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் ஜனவரி 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் இலங்கையை ஒட்டிய தெற்கு வங்க கடலில் மத்திய பகுதிகளில் 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் சில சமயங்களில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.