சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் தெரிவிக்க மாநகராட்சி நிர்வாகம் உதவி எண்களை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இரவு இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது. இதனால் சாலை முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. எனவே 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச உதவி எண் 1913 மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 044-25619206, 044-25619207, 044-25619208 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ’நம்ம சென்னை’ செயலி அல்லது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மூலமாகவும் உதவியை நாடலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.