தமிழ்நாட்டில் கோடை வெயில் தொடங்கியிருந்தாலும், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில், தென் தமிழகம் மற்றும் வட உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் (09.04.2025) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே நிலவுகிறது. இதற்கிடையே, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து தென்தமிழகம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (10.04.2025) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.