சென்னையில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக – கேரள பகுதிகளை கடந்து அரபிக்கடல் பகுதிகளில் செல்லக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. குறிப்பாக, சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் மீண்டும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தியாகராய நகர், வடபழனி, அண்ணாசாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மெரினா கடற்கரை, மயிலாப்பூர், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.