கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சமீபத்தில் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில், 10 மாநிலங்களில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 5 நாட்களுக்கு தென்னிந்தியாவில் மழையின் அளவு குறைய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.