கனமழை காரணமாக பெங்களூருவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்கள் கனமழை தொடர்ந்து வருகிறது.. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கனமழை கொட்டி தீர்த்தது.. தொடர் கனமழை காரணமாக நேற்று பெங்களூரு வெள்ளக்காடாக காட்சியளித்தது.. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.. வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் டிராக்டர்கள் மற்றும் படகுகளின் உதவியுடன் போக்குவரத்தை நாடினர்.

இந்நிலையில் கனமழை காரணமாக பெங்களூருவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் இன்னும் மழை நீர் வடியாததால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. எனினும் பல பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து வருகின்றனர். மழை குறையும் வரை ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதனிடையே பெங்களூரு மற்றும் குடகு, ஷிவமொக்கா, உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் சிக்மகளூர் போன்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 9-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.