தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சை, திருவாரூா், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று என்னை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதேபோல், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.