கேரளாவின் பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரம் உட்பட பல மாவட்டங்களில், கடந்த 28ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால், கடந்த 24 மணி நேரத்தில் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், அங்கு வசித்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதேபோல் ஆலப்புழா மாவட்டத்தின் குத்தானந்த் கிராமத்தில், நெல் பயிரிடப்பட்ட நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விளைநிலத்தை மழைநீர் சூழ்ந்ததால், அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இந்தநிலையில், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் வரை மழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.