தமிழகத்தில் 9 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், மாநிலம் முழுதும் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், 4ம் தேதி வரை, மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, தர்மபுரி, தம்மம்பட்டி, சேலத்தில் 9 செ.மீ., மழை பெய்து உள்ளது. திருச்சி, விழுப்புரம், கரூர், ஈரோடு, மதுரை, செங்கல்பட்டு , திருவண்ணாமலை உள்பட பல மாவட்டங்களில், 1 முதல், 7 செ.மீ., வரை மழை பதிவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.