தமிழ்நாடு, புதுச்சேரியில் ஜனவரி 10ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நீடித்து வரும் நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் ஜனவரி 10ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்றும் (ஜன.4), நாளையும் (ஜன.5) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வரும் ஜன.6ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஜனவரி 7ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.