தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, கடலூர், திருவாரூர், திருச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் தேங்கிய மழைநீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன்படி, இன்று (செப்.17) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.