கேரளாவில், முல்லைப் பெரியாறு அணை நேற்று திறக்கப்பட்டது. அணை அதன் கொள்ளளவை எட்டியதால் கேரளாவில் 20-க்கும் மேற்பட்ட அணைகள் திறக்கப்பட்டன. பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழையால் இடுக்கி, கண்ணூர் போன்ற பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழைக்கு கடந்த ஒரு வாரத்தில் கேரளாவில் 22 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து நேற்று இரவு 11.45 மணியளவில் இடுக்கியில் உள்ள மூணாறு அருகே குண்டலா புதுக்குடி பகுதியில் திடீர்ரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த இரண்டு கடைகள், ஒரு கோவில் மேலும் ஒரு ஆட்டோ மண்ணுக்கடியில் புதையுண்டன.
நள்ளிரவு என்பதால் அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. நிலச்சரிவு பற்றி அப்பகுதியினர் மூணாறு காவல் துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல் துறை மற்றும் தீயணைப்புப் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஒரு தேயிலை தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் புதுக்குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள். உடனடியாக காவல்துறையினர், அந்த 175 குடும்பங்களை சேர்ந்த 450-க்கும் மேற்பட்டோரை மீட்டு குண்டலாவில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் தங்க வைத்துள்ளனர்.
ஒரு சிலரை அருகிலுள்ள அவர்களது சொந்தக்காரர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். நிலச்சரிவை தொடர்ந்து மூணாறு, வட்டவடா நெடுஞ்சாலை பழுதடைந்ததால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரிந்ததும் தேவிகுளம் எம்எல்ஏ ராஜா நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை துரிதப்படுத்தினார். இந்த நிலச்சரிவால் உயிர்ச் பாதிப்பு எதுவும் இல்லை என்றும், மீட்புப் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.
கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி நள்ளிரவில் தான் மூணாறு அருகில் உள்ள பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்தபகுதியில் வசித்து வந்த தமிழக தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு முழுவதுமாக மண்ணுக்கடியில் புதைந்தது. இதில் கர்ப்பிணிகள், குழந்தைகள் உட்பட 70-பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சிக்கிய சிலரது உடல்கள் கிடைக்காமல் போனது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிலச்சரிவு ஏற்பட்ட அதே நாளில் இப்பொழுது மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை.