தெலுங்கானாவில் கனமழை காரணமாக இதுவரை ரூ.1,400 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பருவமழை காரணமாக தெலுங்கானாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை கொட்டி வருகிறது. அங்குள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பொதுமக்களை மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் படகுகள் மூலம் மீட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், வீடுகளில் வளர்க்கப்பட்ட கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின. இந்நிலையில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
![தெலுங்கானாவை புரட்டிப்போட்ட கனமழை..! ரூ.1,400 கோடி சேதம்..! மேலும் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/07/Rain-Telungana-1.jpg)
இதற்கிடையே, மாநிலம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் சென்று இழப்பீடு குறித்து ஆய்வு செய்தனர். இழப்பீடு மதிப்பு குறித்து ஆய்வு பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை. இந்நிலையில், தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர்களுடன் மத்திய குழு தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள் தெலுங்கானாவில் மொத்தம் ரூ.1,400 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது ரூ.1,000 கோடியை உடனடியாக மத்திய அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கிடையே, தெலுங்கானாவில் மேலும் 5 நாட்கள் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.