பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சை செய்ய 45 நிமிடங்கள் ஓடி மருத்துவமனையை அடைந்தார்..
சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.. அதுவும் மழைக்காலம் என்றால் சொல்லவா வேண்டும்..? அந்த வகையில் சமீபத்தில் பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின.. இதனால் அலுவலகம் செல்வோர், பள்ளிக்கு செல்வோர் என பல்வேறு தரப்பினரும் கடும் சிக்கல்களை சந்தித்தனர்..
இந்த வெள்ளத்துக்கு இடையே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட மருத்துவர் ஒருவர் அதில் மாட்டிக் கொண்டார். குறித்து நேரத்தில் அறுவை சிகிச்சைக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவர் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தை 45 நிமிடங்கள் ஓட்டமும் நடையுமாக கடந்து சென்று கடமையை நிறைவேற்றியுள்ளார்.
பெங்களூரு சர்ஜாபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும், மருத்துவர் கோவிந்த் நந்தகுமார் சர்ஜாபூர் மாரதஹல்லி இடையே கடுமையான போக்குவரத்தில் மாட்டிக் கொண்டார். மருத்துவமனையில் பித்தப்பை அறுவை சிகிச்சைக்காக நோயாளி தயாராக இருக்க மருத்துவர் கோவிந்த் நந்தகுமார் காரில் இருந்து இறங்கி மருத்துவமனையை நோக்கி ஓடியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “நான் சர்ஜாபூரில் உள்ள மருத்துவமனயை அடைய வேண்டும். ஆனால் கார் கடுமையான போக்குவரத்து நெரிசலில் கன்னிங்ஹாம் சாலையிலேயே மாட்டிக் கொண்டது. கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. போக்குவரத்து சீராகும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அங்கே மருத்துவமனையில் எனக்காக நோயாளி காத்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் வந்தது. அதனால் காரில் இருந்து இறங்கி ஓடினேன். 45 நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்தேன். அன்றைய தின அறுவை சிகிச்சைகள் எல்லாமே நல்ல படியாக முடிந்தது” என்று தெரிவித்தார். மருத்துவர் நந்தகுமாரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
மருத்துவர் நந்தகுமார் கடந்த 18 ஆண்டுகளாக ஜீரண மண்டல உறுப்புகள் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். கேஸ்ட்ரோ என்ட்ரோ அறுவை சிகிச்சை நிபுணர் என்று அழைக்கின்றனர். ஜீரண மணடல் உறுப்புகளில் ஏற்படும் ட்யூமர் கட்டிகளை அகற்றுவதில் அவர் கை தேர்ந்தவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..