நேரில் சென்று அல்லது அக்கம்பக்கத்தில் விசாரித்து பெண் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் படலம் தற்போது காற்றில் கரைந்துவிட்டது. இன்டர்நெட்டில் தட்டினால் அனைத்தும் கிடைத்துவிடுகிறது. இது பல நேரங்களில் ஆபத்தில் முடிந்துவிடுகிறது. அந்த வகையில், கிருஷ்ணகிரியில் நடந்த சம்பவம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த பூங்கோதை (38) என்ற பெண்ணின் கணவர் சில ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவர் தனியாக வசித்து வந்தார். இதையடுத்து, இரண்டாவது திருமணம் செய்வதற்காக தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி பூங்கோதையை செல்போனில் தொடர்புகொண்ட நபர் ஒருவர், தான் கிருஷ்ணகுமார் என்றும் தற்போது துபாயில் இருப்பதாகவும், உங்களை திருமணம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் இருவரும் செல்போனில் பேசி விவரங்களை பகிர்ந்துகொண்டனர். அதோடு தனது புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம் பூங்கோதை அனுப்பியுள்ளார். அடிக்கடி போனில் பேசி நன்றாக பழக்கம் ஆனதால், இருவரும் திருமணம் செய்துக்கொண்டு ஒன்றாக வாழ்வது என கிட்டத்தட்ட முடிவானது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், பூங்கோதையை தொடர்பு கொண்ட துபாய் நபர், தான் திருமணத்திற்காக அதிகளவில் நகையை எடுத்து வந்ததால் டெல்லி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் தன்னை கைது செய்துவிட்டனர். நகைகளையும் பறிமுதல் செய்துவிட்டனர். அவற்றை மீட்க ரூ.17 லட்சத்து 500 செலுத்தும்படி அதிகாரிகள் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பூங்கோதை தன்னிடம் இருந்த பணம் மற்றும் தெரிந்தவர்களின் நகைகளை வாங்கி அடமானம் வைத்து கிருஷ்ணகுமார் கேட்ட பணத்தை அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். சிறிது நேரத்துக்கு பின் என்ன நிலைமை என்று தெரிந்துகொள்ள பூங்கோதை அவருக்கு அழைத்துள்ளார். ஆனால் அதன்பின் அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பூங்கோதை, இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்த அந்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.