”இனி மாணவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று தன்னுடைய ஆசிரியருக்கு மாணவி ஒருவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள செய்தி தற்போது வைரலாகி வருகிறது.
கற்கும் திறன் என்பது ஒவ்வொரு மாணவருக்கும் வேறுபடும். சிலர் பாடங்களை வேகமாக உள்வாங்கிக் கொள்வார்கள். சிலருக்கு கூடுதல் கவனம் தேவை. ஆனால், இங்கு அனைவருக்கும் ஒன்றுபோல கற்பித்துவிட்டு, அனைத்து மாணவர்களிடமும் ஒரே மாதிரி ரிசல்ட்டை எதிர்பார்ப்பதுதான் அதிகம் நடக்கிறது. அந்த எதிர்பார்ப்புகள் தகரும்போது குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களின் மீது வசை சொற்கள் விழும். அந்தவகையில் மாணவி ஒருவர் தன்னுடைய ஆசிரியரின் இன்ஸ்டா ஐடி-யை கண்டுபிடித்து ஒரு செய்தியைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “ஹலோ மேடம், 2019 – 2020ஆம் ஆண்டில் உங்களிடம் 10ஆம் வகுப்பு பயின்ற மாணவிகளில் நானும் ஒருவர். இந்த மெசேஜை உங்களுக்கு அனுப்புவதற்கு காரணம், என்னால் படிப்பில் தேர்ச்சி பெற முடியாது என ஒவ்வொரு முறையும் நீங்கள் என்னை மட்டம் தட்டித் தாழ்த்தியது தான். இன்று நான் 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றுள்ளேன். அதுமட்டுமல்லாமல் நான் விரும்பிய பல்கலைக்கழகத்தில், எனக்குப் பிடித்த பாடத்தையே பயில்கிறேன். இது உங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கான மெசேஜ் அல்ல, என்னால் முடியும் என உங்களிடம் காட்ட அனுப்பப்பட்ட மெசேஜ். இனி மாணவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், குறிப்பாக, உங்களின் உதவி தேவைப்படும் மாணவர்களிடம் கனிவாக இருங்கள்” என அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவு ட்விட்டரில் தற்போது வைரலாகி வருகிறது.