எல்.எல்.ஆர்., என்ற, பழகுனர் உரிமம் உள்ளிட்ட, 25 வகையான ஆவணங்களை வீடுகளில் ஒப்படைக்கும் முயற்சியில் தமிழ்நாடு போக்குவரத்து துறையும் தபால் துறையும் ஈடுபட்டுள்ளன.
தமிழகம் முழுதும் உள்ள, 91 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், 54 வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்களை, கணினி மயமாக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது. ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், 48 சேவைகளில் முதற்கட்டமாக, ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட, 6 சேவைகள் ஏற்கனவே ஆன்லைனில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதையடுத்து, பழகுனர் உரிமம், நகல் ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் உரிமத்தில் பெயர் மாற்றம், பன்னாட்டு ஓட்டுனர் உரிமம், வாகனத்துக்கான தற்காலிக பதிவெண், பர்மிட்டில் பெயர் மாற்றம், பர்மிட் ஒப்படைத்தல் உள்ளிட்ட, 25 சேவைகளை ஆன்லைனில் பெறும் வசதி ஜூலை 14ம் தேதி துவங்கப்பட்டது. இருப்பினும், இது முழு வீச்சில் செயல்படவில்லை. அதை சரி செய்ய போக்கு வரத்து ஆணையரகம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
இதுதொடர்பாக போக்கு வரத்து ஆணையகஅதிகாரிகள் கூறியதாவது, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் தற்போது, 31 வகையான சேவைகள் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன. மக்கள் இந்த சேவைகளை பெற ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விபரங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விபரங்கள் மாறுபட்டிருந்தால் சேவையை பெற இயலாது. போக்குவரத்து சார்ந்த சேவைகளை மாநில போக்குவரத்து ஆணையத்தின் https://tnsta.gov.in இணைய தளத்தில் பெறலாம். ஆவணங்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில், தபால்துறையுடன் இணைந்து செயல்பட உள்ளோம். ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் பங்கேற்கவும், வாகன எப்.சி., உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பெறவும், ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.